நாளும் நாற்காட்டியும், நாமும் முன் செல்ல by PG S BALAJI (RYLA BaE 4.0)
- PUNCH GURUKULAM
- Jan 15, 2024
- 2 min read
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் தேதி புத்தாண்டு பிறக்கிறது என்று அனைவரும் கொண்டாடுகிறோம். மீண்டும் 365 நாட்கள் கழித்து, மீண்டும் ஒரு புதிய ஆண்டு பிறக்கும், அதையும் நாம் கொண்டாடுவோம்.
இப்படியே இதை ஒவ்வொரு ஆண்டும் செய்கிறோம். இதற்கிடையில், ஒவ்வொரு, ஜனவரி முதல் தேதியில், இந்த ஆண்டு இதை இதை எல்லாம் நான் செய்ய வேண்டும் என தீர்மானம் மேற்கொள்கிறோம்.
அதை அதிகபட்சம் மூன்று வாரங்கள் கடைபிடிப்போம் பிறகு மீண்டும் இயல்பு நிலைக்கே திரும்பிவிடுவோம். இதுவே எல்லா வருடமும் நடக்கிறது, வினைத்தொகையை போல.
‘என் வாழ்க்கை பயணத்தை பார்க்கும்பொழுது, ஓரளவுக்கு மனநிறைவு ஏற்படுகிறது. ஆனாலும், சில நேரங்களில், ஒரு முழுமையற்ற, வெறுமையான மனநிலையும் ஏற்படுகிறது. இன்னும் ஏதோ ஆழமாக, அர்த்தமுள்ள ஒன்றை மனம் தேடுகிறது, நாளும் மாறுகிறது நாற்காட்டியும் மாறுகிறது ஆனால் நான் மாறவில்லை முன்னேறவில்லை’, என்று நமக்கு தோன்றுவது இயல்பே.
நாம் அனைவரும் நம் வாழ்வில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் வேண்டும் என நினைக்கிறோம், உழைக்கிறோம். உண்மையில் நாம் என்ன தான் செய்கிறோம்? நாம் முன்னேறவேண்டும் என நினைக்கமட்டும் செய்கிறோம், சில நேரம் மற்றவர் வாழ்கையை பார்த்து அதே போல் வாழ ஆசைக்கொள்கிறோம். அவ்வாறு நாம் நினைத்த வண்ணம் அமையவில்லை என்றால் மனம் வருத்தத்திற்கும், அழுத்தத்திற்கும் உள்ளாகிறோம்.
ஆனால் உண்மையில் நமக்கு என்ன தேவை, நாம் என்ன, எப்படி தீர்மானம் எடுக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் நாம் சுய முன்னேற்றத்திற்கு என பல கேள்விகள் உள்ளுக்குள் எழலாம்.
புது வருட தீர்மானம் எடுக்கும் முன், கீழ் சொல்லப்படும் கருத்துகளையும் நினைவுக்கொள்ளுங்கள்.
கடந்து வந்த பாதையை பாருங்கள்:
ஒவ்வொரு ஆண்டு இறுதியும், இயற்கையாகவே அந்த ஆண்டில் நடந்த சுவாரசிய நிகழ்வுகள்,மேற்கொண்ட கஷ்டங்கள்,சாதனைகள், கடந்த சோதனைகள் என அனைத்தையும் நினைவுகூரும் சூழல் வரும். அதில் நாம் கற்ற பாடங்கள் மற்றும் அனுபவங்கள் மூலம் வாழ்வில் முன்னேறும் வழியை கண்டறியுங்கள்.
நோக்கம் வேண்டும்:
நாம் முன்னேற வேண்டும் என வெறும் ஆசை மட்டும் கொண்டால் போதாது, அதற்கு தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு தீர்மானத்திற்கும் ஒரு தெளிவான நோக்கம் வேண்டும்.
வளர்ச்சி மனப்பான்மை வளர்த்தல் :
தீர்மானங்கள் நிறைவேறாமல் போவதற்கு முக்கிய காரணம், நம்மால் முடியுமா? என்ற சந்தேகம் மற்றும் ஒருமுறை தோற்றுவிட்டால் நம்மால் முடியாது என அதை விட்டு விலகுவதும் ஆகும். நம் மனநிலையே நம் வளர்ச்சியை தீர்மானிகிறது. எனவே, நிலையான மனபான்மையை விட்டு வளர்ச்சி மனப்பான்மையை வளர்த்தல் வேண்டும்.
நேர்மறை பழக்கங்களை உருவாக்குதல்:
தீர்மானங்கள் பெரும்பாலும் நேர்மறையான பழக்கங்களை உருவாக்குவதைச் சுற்றியே இருக்கும். தினசரி உடற்பயிற்சி, நினைவாற்றல் பயிற்சிகள் அல்லது தொடர்ந்து வாசிப்பது எதுவாக இருந்தாலும், இந்தப் பழக்கங்கள் நமது ஒட்டுமொத்த நல்வாழ்வு மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன. இந்த பழக்கங்களை ஒட்டிக்கொள்வதில் நிலைத்தன்மை முக்கியமானது.
முன்னேற்றத்தைக் கொண்டாடுங்கள் , முழுமை அல்ல:
சுய-வளர்ச்சிக்கான பயணம் என்பது முன்னேற்றம் என்பதை அங்கீகரிப்பது ஆகும், அதுவே அவசியம். வழியில் சிறிய வெற்றிகளைக் கொண்டாடுங்கள், திட்டமிட்டபடி விஷயங்கள் நடக்கவில்லை என்றால் உங்களைப் பற்றி மிகவும் கடினமாக நினைக்க வேண்டாம். நாம் யாரும் நுறு சதவீதம் எந்த செயலையும் சரியாக செய்பவர்கள் அல்ல. அதனால், ஒரு செயலை தொடங்கியவுடன் அதில் முழுமையாக வெற்றிக்கான முடியவில்லை என எண்ணவேண்டாம். அதை தொடர்ந்து செய்ய செய்ய அதில் நாம் முன்னேற்றம் பெறலாம்.
முடிவில், புத்தாண்டு தீர்மானங்கள் சுய வளர்ச்சிக்கான சக்திவாய்ந்த ஊக்கியாக செயல்படுகின்றன. அவை நம் வளர்ச்சிக்கான கட்டமைப்பை வழங்குகின்றன, சவால்கள் மற்றும் மாற்றங்களைத் தழுவும் மனநிலையை வளர்க்கின்றன. புத்தாண்டை நாம் வரவேற்கும் வேளையில், இந்த பயணத்தை உற்சாகத்துடனும், உறுதியுடனும், நாம் நமது சிறந்த பதிப்பாக மாறுவதற்கான அர்ப்பணிப்புடனும் தொடங்குவோம்.
நாளும் நாற்காட்டியும் மட்டுமே முன்னால் போகிறது, நான் அல்ல என்ற எண்ணம் தவிர்த்து, நாளும் நாற்காட்டியும் உடன் நானும் முன் செல்கிறேன் என வளர்ச்சி, கற்றல் மற்றும் நேர்மறையான மாற்றத்தின் ஒரு வருடம் இதோ!
இனிய 2024-ம் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!


Comments