YOU ARE WHAT YOU EAT– உணவே நீ ... by PG SUBASH (RYLA 17.0)
- PUNCH GURUKULAM
- Nov 11, 2024
- 2 min read
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்” – திருக்குறள் 942
பொருள்: முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.
நாம் வாழ்கின்ற இந்த உடலுக்கு தேவையானது மூன்று தான். முதலில் காற்று, இரண்டாவது நீர் மற்றும் மூன்றாவது உணவு.
உணவு ஓர் உணர்வு, கொண்டாட்டங்களின் உச்சமாக மனிதர்கள் விருந்தையே வாழ்வியலில் வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட அந்த உணவுதான் உங்களை தீர்மானிக்கின்றது.
ஆமாங்க!, உங்களின் தோற்றம், செயல் என இவற்றில் முக்கியமான பங்காற்றுவது நீங்கள் உண்ணும் உணவு.
மனிதனின் இரண்டாம் மூளை என்று அழைக்கப்படுவது குழல் நரம்பு மண்டலம் (Enteric Nervous System – ENS)தான். நமது வயிறு, சிறுகுடல் மற்றும் பெருங்குடல் என மூன்றையும் உள்ளடக்கிய தொகுப்பு ஆகும்.
இவற்றை சரியாக பராமரிப்பதன் மூலம் நாம் நமது ஆரோக்கியம், தோற்றம் மற்றும் செயல்களில் நல்ல முன்னேற்றம் காணலாம்.
அதற்கான சில வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்.
முதல் மற்றும் முக்கியமாக பின்பற்ற வேண்டிய வழிமுறை சரிவிகித உணவு (Balanced Diet).
நாம் உண்ணும் உணவில் அனைத்து விதமான ஊட்டச்சத்துகளும் இருந்தாலே சரிவிகித உணவாகும். ஒரு வானவில்லின் நிறங்களைப் போல நம் உணவு தட்டுகளில் வண்ணம் உள்ள அனைத்து உணவு பொருட்களும் இருந்தாலே போதுமானது. அவை காய்கனிகள், பழத் துண்டுகள், தானியங்கள் பருப்பு வகைகள், முட்டை இறைச்சி வகைகள், நீர் ஆகாரம் என அனைத்தும் சரியான விகிதத்தில் நாம் உட்கொள்ளுதலே உடலுக்கு மேலும் ஆரோக்கியத்தை சேர்க்கும்.
சரிவிகித உணவை நாம் தேர்வு செய்வதற்கான சில வழிமுறைகள்:
1. நாம் வாழும் சுற்றுச்சூழலில் விளையும் உணவுப் பொருட்களை நம் உணவு பட்டியலில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
2. குறிப்பிட்ட காலநிலையில் மட்டும் விளைகின்ற உணவுகளையும் அந்தந்த காலநிலையில் உணவு பட்டியலில் சேர்த்து நாம் உட்கொள்ளுதல் வேண்டும்.
3. நாம் உண்ணும் உணவில் அறுசுவைகளும் தருகின்ற உணவுகளை சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும் அல்லது குறைந்தது மூன்று முதல் அதிகபட்சமாக ஆறு சுவைகளையும் (இனிப்பு, புளிப்பு, கசப்பு, உவர்ப்பு, கார்ப்பு, துவர்ப்பு) உள்ளடக்கிய உணவு பட்டியலை நாம் உட்கொள்ளுதல் வேண்டும்.
4. நீரும் ஓர் உணவுதான் ஆகையால் உண்ணுவதற்கு முன் நீர் அருந்துதல் உடல் நரம்பு மண்டலத்தின் செரிமானத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
5. உண்ணும் உணவை சரியாக சுவைத்து மென்று விழுங்குவதால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எளிதில் உடலால் உறிஞ்சி ஏற்றுக் கொள்ளப்படும்.
முடிவுரை:
பிடித்த எல்லாம் சாப்பிடுங்க, ஆனா! பிடித்த அளவு சாப்பிடாமல், அளவோடு உண்ணுங்கள்.
நமது உடலின் உணவுப் பாதையில், உணவு 50%, நீர் 25%, காற்று 25, என்ற விகிதத்தில் அமைந்தாலே நம் உடலுக்கு ஆரோக்கியம் மென்மேலும் சேர்ந்துகொண்டே போகும்.
“மருந்தென வேண்டாவாம்” – you are what you eat.


Comments